சேலம்: சேலத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துவதற்காக வந்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, வந்த இடத்தில் ஏராளமான ஈக்கள் மொய்த்ததால் அவசர அவசரமாக தம்பதியை வாழ்த்திவிட்டு திருமண மண்டபத்தை விட்டு அவர் வெளியேறினார்.
சேலம் மாவட்ட அதிமுக பொருளாளர் 'பங்க்' வெங்கடாசலத்தின் திருமண வரவேற்பு விழா, ராசிபுரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள் மண்டபத்தில் கூட்டம் கூட்டமாக மொய்த்துக் கொண் டிருந்த ஈக்களால் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக, விருந்து நடக்கும் இடங்களில் எல்லாம் கும்பல் கும்பலாக ஈக்கள் பறந்தன. மண்டபத்தில் நிம்மதியாக அமரக்கூட முடியாமல் பலரும் அல்லாடினர்.
விழாவுக்கு வந்திருந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியையும் ஈக்கள் கூட்டம் விட்டு வைக்கவில்லை. இதனால், மணமக்களை வாழ்த்திவிட்டு, அவர் மண்டபத்தை விட்டு விரைவாக வெளியேறினார்.
இவரைப்போலவே முன்னாள் அமைச்சர்கள் சரோஜா, விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் ஈக்கள் தொல்லையால் விரைவாக மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.
இதனால், திருமண வீட்டார் மிகுந்த கவலைப்பட்டனர்.
அந்த திருமண மண்டபத்தைச் சுற்றி அதிக அளவில் கோழிப் பண்ணைகள் இருப்பதே இதுபோல் ஈக்களின் தொல்லை தாங்கமுடியாமல் இருப்பதற்கான காரணம் என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

