சென்னை: தமிழகத்தில் கொவிட் -19 கிருமிப் பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் சூழலில், இத்தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொள் வது அவசியம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
கூட்டம் அதிகம் உள்ள இடங் களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக்கொள் வதும் முக்கியம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
போதிய அளவு பரிசோதனைகள், தொடா் கண்காணிப்பு, பாதிக்பட்டோருக்கு சிகிச்சை வசதிகள், தடுப்பூசி ஆகியவற்றை முறையாகப் பின்பற்றும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தவேண்டும் என அரசு உயர் அதிகாரிகளை முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
"பணிபுரியும் இடங்கள், திருவிழாக்கள், திருமணங்கள், கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வோரில் ஒரு சிலா் தொற்றால் பாதிக்கப்பட்டாலும் கூட அவா்கள் அனைவரையும் பரிசோதித்து, தொடா் கண்காணிப்புக்கு உட்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சைகளையும் அளிக்கவேண்டும்.
"கொரோனாவை வெல்லும் ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதால் அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவேண்டும். அதன் நன்மையை உணர்ந்து, அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்," என முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதனிடையே, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால், மாணவர்கள் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து வர வேண்டும் என பெற்றோர்க்கு பள்ளிக் கல்வித் துறை குறுந்தகவல்களை அனுப்பியுள்ளது.
லட்சம் இடங்களில் தடுப்பூசி போடும் பணி
தமிழகத்தில் கொவிட்-19 தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்குத் தடுப்பூசி போட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கிருமிப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் நேற்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைெபற்றது.
அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குப் படிக்க வரும் மாணவர்களால் தமிழகத்தில் கிருமிப்பரவல் சற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாகக் கூறிய அமைச்சர், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 217 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 88வது நாளாக கொரோனா உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. தமிழகத்தில் இதுவரை 93.87 விழுக்காட்டினர் முதல் தவணை தடுப்பூசியும் 83.07 விழுக் காட்டினர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு விவரம் தெரிவித்துள்ளது.

