திருச்சி: கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏறக் குறைய 1,500 பேர், 200 மாட்டு வண்டிகளில் ஆன்மிகப் பயணமாக திருவரங்கத்திற்கு வந்தனர்.
கடந்த சனிக்கிழமையன்று தங்களது குலதெய்வமான திருச்சி, திருவரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமியை தரிசித்து அவர்கள் வழிபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று ஞாயிறன்று அவர்கள் கொள்ளிடம் ஆற்றங்கரையில் குழந்தைகள், பெரியவர்களுக்கு முடிகாணிக்கை செலுத்தினர்.
அதன்பின்னர், ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் தங்களது உண்டியல் காணிக்கையைச் செலுத்திவிட்டு குழந்தைகளுக்கு காது குத்தும் வைபவத்தை நடத்தி, அன்னதானம் வழங்கினர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காரணம்பட்டி, கீழவெளியூர், கள்ளுப்பட்டி, ராக்கம்பட்டி, தொரைக் கலாம்பட்டி, டி.மேலப்பட்டி, புதுப்பட்டி, சங்காயிப்பட்டி, திருச்சி மாவட்டம், காவல்காரன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், 200 மாட்டுவண்டிகள், டிராக்டர், வேன் உள்ளிட்ட மொத்தம் 300 வாகனங்களில் திருவரங்கம் ரெங்கநாதரை வழிபட வந்தனர்.
கடந்த நான்கு தலைமுறையாகவே இவர்கள் குடும்பம் குடும்பமாக இதுபோல் மாட்டுவண்டியில் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழிபாடு நடத்துவது இவர்களது வழக்கம் என்றாலும், ெகாரோனா ஊரடங்கு காரணமாக வழிபாட்டில் தடை ஏற்பட்டுப் போனதால் இப் போது மீண்டும் அவர்கள் தங்களது வழிபாட்டை ஏழு ஆண்டுகள் கழித்து தொடங்கி உள்ளனர்.
கார்கள் முதல் விமானங்கள் வரை போக்குவரத்துத்துறை நவீன முன்னேற்றம் அடைந்து வரும் சூழலில், இன்றளவும் பழமை மாறாமல் ஜல்ஜல் சத்தத்துடன் மாட்டு வண்டியில் கிராம மக்களின் பயணம் தொடர்வதை பொதுமக்களும் குழந்தைகளும் சாலையோரமாக நின்று வியப்புடன் ரசித்தனர்.

