கோவை: தனது ரயில் பயணத்தின்போது உரிய இருக்கை வசதி செய்து கொடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய பயணிக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கும்படி தெற்கு ரயில்வேக்கு மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பயணிகளின் டிக்கெட்டுகளைப் பரிசோதிக்கும் டிக்கெட் பரிசோதகர் ஒருவர்மீது, ரயில் பயணிகளை மரியாதையின்றி தரக்குறைவாகத் திட்டி, மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில், பாதிப்புக்கு ஆளான பயணிக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவையில் நீதித்துறை அலுவலராகப் பணியாற்றி வருகிறார் சந்திரசேகரன். இவர், மாநில நுகர்வோர் ஆணையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், கடந்த 2014ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கோவை-சென்னைக்கு இடையிலான ரயில் பயணத்தின்போது தனக்கான இருக்கை ஒதுக்கியதில் குளறுபடி ஏற்பட்டதாகவும் அதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டபோது, தகாத வார்த்தைகளால் அவர் திட்டியதாகவும் இதனால் மூத்த குடிமக்களான தனது பெற்றோரும் குழந்தை களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளா னதாகவும் தெரிவித்திருந்தார்.
ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு, டிக்கெட் பரிசோதகரின் நடத்தையால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் இதற்கு நஷ்டஈடாக ரூ.25 லட்ச ரூபாய் வழங்கவேண்டும் எனவும் கோரி இருந்தார்.
தன்னைப் போல 70க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மனுவை விசாரித்த ஆணையம், மனுதாரரின் மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.50,000 வழங்கவும் வழக்கு செலவுத் தொகையாக ரூ.10,000 வழங்கவும் ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

