சென்னை: சென்னை கொடுங் கையூர் காவல்நிலையத்தில் விசாரணைக் கைதி ஒருவர் சந்தேகப்படும் வகையில் உயிரிழந்தது தொடர்பில், காவல் ஆய்வாளர் உள்பட ஐந்து காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைத்து காவல்துறைத் தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
ஐந்து காவலர்களும் கெல்லீஸ் சிறார் நீதிமன்ற நீதிபதி லட்சுமி முன்பு நேற்று முன்னிலையான நிலையில், விசாரணை நடந்தது.
சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 31. இவரை, ஒரு திருட்டு தொடர்பாக கொடுங்கையூர் காவல்நிலைய காவலர்கள் அழைத்துச்சென்று விசாரித்துள்ளனர். அப்போது, அவருக்கு உடல் நலமில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று காவலர்கள் பரிசோதித்தபோது, ராஜசேகர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்து வர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், "காவல்துறையினர் தாக்கியதால்தான் என் மகன் உயிரிழந்துவிட்டான். அவனுக்கு எந்த நோயும் இல்லை. வலிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக காவ லர்கள் பொய் சொல்கிறார்கள். அவ னது சாவுக்கு நீதி கிடைக்கும்வரை சடலத்தை வாங்கமாட்டேன்," என கூறியுள்ளார் ராஜசேகர் தாயார்.
இதுகுறித்து சென்னை கூடுதல் ஆணையர் அன்பு கூறுகையில், "உயிரிழந்த கைதி ராஜசேகர் மீது ஏற்கெனவே 27 குற்ற வழக்குகள் இருந்தன. விசாரணையின்போது அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரது மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரிப்பார். இச்சம்பவம் தொடர்பில் கொடுங்கை யூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ணன், சத்தியமூர்த்தி ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்," என்றார்.
இதனிடையே, திமுக ஆட்சியில் சிறை மரணங்கள் தொடர்கதையாகி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
"இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; இனி இப்படி நடக்காது என்று முதல்வர் சொல்வ தெல்லாம் வெறும் கண்துடைப்புதான் என மக்களை நினைக்க வைத்துள்ளது இந்த மரணங்கள்," என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.

