'கல்வி தாகத்தை தீர்க்கவே எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்படுகிறது'
சென்னை: தண்ணீர் எப்படி தாகத்தை போக்குகிறதோ, அதே போல் கல்வி தாகத்தை, அறிவு தாகத்தை தீர்க்கக்கூடிய வகையில் 'எண்ணும் எழுத்தும்' என்ற திட்டம் தமிழக அரசால் தொடங்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய அவர், ஒவ்வொரு குழந்தையும் கற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் இந்தப் புதிய திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது என்றார்.
இத்திட்டத்தின் கீழ் வரும் பாடங்கள் அனைத்தும் ஆடல், பாடல், கதையாக சொல்லுதல், நடித்துக் காட்டுதல், பொம்மலாட்டம், கைவினைப் பொருள்கள் எனப் பல்வேறு வடிவங்களில் பயிற்றுவிக்கப்படும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
"கல்வி மட்டும்தான் நம் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும். கல்வி உரிமை என்பது நாம் போராடிப் பெற்றது. எனவே, கல்வியின் மீதான ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
"படிக்காமல் சாதித்த ஒருவரை யாராவது எடுத்துக்காட்டாக காட்டினால், அதற்கு இணையாக படித்து சாதித்த லட்சம் பேரை நாம் காட்ட முடியும். படிக்காமல் சாதிக்கலாம் என்று யாராவது சொன்னால், அது தன்னம்பிக்கை ஊட்டுவது அல்ல. வெறும் ஆசை வார்த்தைகள்தான். தவறான பாதையை கைகாட்டும் சூழ்ச்சி அது," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக அரசின் 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் ஒரு பகுதியாக தொடர் வாசிப்பு இயக்கம் கடந்த 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், கூகல் நிறுவன செயலி மூலம் நடந்த இவ்வியக்கத்தில் தமிழக அரசுப் பள்ளி குழந்தைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் 200 கோடி சொற்களை வாசித்ததாகத் தெரிவித்தார்.
"14 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இச்சாதனையில் 81.04 லட்சம் கதைகள், 7.04 லட்சம் மணி நேரத்தில் வாசிக்கப்பட்டுள்ளன. உலகிலேயே 'ரீட் அலௌட்' செயலியில் இதுவரை இவ்வளவு பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டதில்லை," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

