மதுரை: தமிழக காவல்துறை மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகள் காரணமாக தென் மாவட்டங்களில் கஞ்சா புழக்கம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
கஞ்சா விற்பனைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்றும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
மதுரை, தேனி, திண்டுக்கல் உட்பட பத்து மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டலத்தில் மட்டும் இதுவரை 90 பேர் கஞ்சா தொடர்பான வழக்குகளில் சிக்கி குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகிஉள்ளனர். மேலும் அவர்களுடைய சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி அஸ்ரா கார்க், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்தால் இளைய சமுதாயத்தின் வாழ்க்கை சீரழிந்துவிடும் என்றார்.
"தென்மாவட்டங்களில் மாணவர்கள், இளையர்களைப் பாழாக்கும் கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க தீவிரம் காட்டியுள்ளோம். ஆந்திரா, கேரளா போன்ற பகுதியில் இருந்து கஞ்சா வருவதாக கிடைத்த தகவலின்பேரில் தேனி, திண்டுக்கல் போன்ற மலையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது," என்றார் அஸ்ரா கார்க்.
குற்றவாளிகள் மீது வழக்கு பாய்வதோடு, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், குற்றவாளிகள், அவர்களின் குடும்பத்தினரது சொத்துகளும் முடக்கப்படுகின்றன என்றார்.
சில்லறை விற்பனையில் ஈடுபடுபவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு வருவதாகவும் தொடர் நடவடிக்கைகளால் தற்போது தென்மாவட்டங்களில் கஞ்சா விற்பனையும் கடத்தலும் குறைய தொடங்கியுள்ளது என்றார்.
மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மட்டும் இதுவரை கஞ்சா தொடர்பாக 494 வழக்குகள் பதிவாகி உள்ளன என்றும் இது தொடர்பாக 813 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் சுமார் ரூ.96 லட்சம், திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1.80 கோடி, தேனி மாவட்டத்தில் ரூ.23 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. காவல்துறையின் செயல்பாட்டுக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

