நாமக்கல்: மூத்த முற்போக்கு எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி தமது 88வது வயதில் காலமானார்.
நாமக்கல்லைச் சேர்ந்த அவர் தாகம், சர்க்கரை, பவளாயி, தலைமுறை மாற்றம், சுரங்கம், பாலை நில ரோஜா ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.
சின்னப்ப பாரதியின் நாவல்கள் ஆங்கிலம், பிரெஞ்ச், டேனிஷ், சிங்களம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி என இந்திய, வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சுரங்கத் தொழிலாளர்களின் சமூக வாழ்வை துல்லியமாக பிரதிபலித்தவர் சின்னப்ப பாரதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், விவசாயக் குடும்பத்தில் பிறந்த சின்னப்பாரதி சமூக சீர்திருத்தங்களில் முனைப்பு காட்டியவர் என்றும் பகுத்தறிவு சார்ந்த அறிவியல் கருத்துகளை முன்னெடுத்து வந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"முதுமையை எட்டிய நிலையில் கு.சின்னப்ப பாரதி 'இலக்கிய கருத்தரங்கு நினைவு அறக்கட்டளை' அமைத்து புதிய படைப்பாளிகளை ஊக்கப்படுத்தி வந்தவர். அவரது இலக்கியப் பணி பல விருதுகளை வென்று, பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சமூகத்தை உள்வாங்கி, பிரதிபலித்து அதன் எதிர்கால பயணத்திற்கு சரியான திசைவழி காட்டும் படைப்பாளியை இலக்கிய உலகம் இழந்துவிட்டது," என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

