700 கி.மீ. பயணம் செய்து திருடப்பட்ட லாரியை மீட்ட காவல்துறை
வேலூர்: வேலூரில் இருந்து சுமார் எழுநூறு கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு, சுமார் 550க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து திருடப்பட்ட லாரி ஒன்றை காவல்துறையினர் நாமக்கல்லில் கண்டுபிடித்து மீட்டனர். அக்குறிப்பிட்ட லாரி வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 18ஆம் தேதி திருடப்பட்டது. ஆடவர்கள் இருவர் ஒரு காரில் வந்து லாரியைக் கடத்தினர். எனினும் அந்தக் கார் எங்கு போனது என்று தெரியவில்லை. இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் வேலூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வழியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர். இதற்காக 700 கிலோ மீட்டர் பயணம் செய்தும் பலனில்லை. இந்நிலையில், குற்றவாளிகளின் கைபேசி தொடர்பு எண்கள் கிடைத்ததை அடுத்து, தேடுதல் வேட்டை நீடித்தது. அப்போது குற்றவாளிகளில் ஒருவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் ஒசூரில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
மாணவர்கள் பள்ளிக்கு கைபேசி கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும்
சென்னை: தமிழகத்தில் மாணவர்கள் பள்ளிக்கு கைபேசி கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களின் கவனச் சிதறலைப் போக்கும் வகையில் பள்ளிகளில் முதல் ஐந்து நாள்கள் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அதன் பிறகே வகுப்புகள் தொடங்கும் என்றும் குறிப்பிட்டார். மாநிலத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 90 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
குப்பைகளை தரம் பிரித்து தராவிட்டால் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை: பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து தராவிடில் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தனி நபர் இல்லங்களுக்கு ரூ.100, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் பெருமளவு குப்பை சேர வழிவகுப்பவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
புதுவை, யாழ் இடையே படகுச்சேவை
புதுவை: இலங்கையின் யாழ்ப்பாணம், புதுவை இடையே பயணிகள், சரக்குப் படகுச் சேவைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், இலங்கையில் உள்ள பலாலியில் இருந்து தமிழகத்தின் திருச்சிக்கு விமானச் சேவையை தொடங்குவதற்கும் இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

