நேஷனல் ஹெரால்டு வழக்குத் தொடர்பில் ராகுல் காந்தியிடம் மூன்றாவது நாளாக நேற்று புதனன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை, காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச்சென்று கைது செய்தனர். டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மூன்றாவது நாளாக அமைதியான வழியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் மகளிர் அணியின் தரப்பிலும் காங்கிரஸ் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் சாலையில் அமர்ந்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியைக் கைது செய்து வேனில் ஏற்றியபோது அவர் மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டார்.
படம்: தமிழக ஊடகம்

