சிவகங்கை: கிராம மக்களின் ஒற்றுமை, கூட்டுமுயற்சியின் விளைவாக கடந்த 27 ஆண்டுகளாக இழுத்து மூடப்பட்டிருந்த அரணையூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மீண்டும் செயல் படத் தொடங்கியுள்ளது.
இந்தப் பள்ளியைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான கழிவறை, சுற்றுச்சுவர் மற்றும் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு உதவவேண்டும் என இப் பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், இளை யான்குடி அருகே உள்ள அரணை யூரில் 70 ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்ததை அடுத்து கடந்த 27 ஆண்டுகளாக மூடிக் கிடந்தது.
இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஊராட்சி மன்றத் தலைவர் முனீஸ்வரி கணேசன், கிராம மக்களின் ஒத்துழைப்போடு அதிகாரிகள், ஆட்சியாளர்களைச் சந்தித்து தங்களது கிராமத்தில் பூட்டிக் கிடக்கும் பள்ளியை மீண்டும் திறப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
ஆனால், பாழடைந்த நிலையில் இருக்கும் பள்ளிக்கு அரசால் நிதி உதவி வழங்க இயலாது என அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
இந்நிலையில், கிராமமக்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டு ரூ.2 லட்சம் வரை வசூலித்து பள்ளிக் கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

