அரசுப் பள்ளியில் மகனை சேர்த்துப் படிக்க வைக்கும் நீதிபதி
அவினாசி: திருப்பூர் மாவட்டம், அவினாசி உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருப்பவர் வடிவேல். இவர் தனது மகன் நிசாந்த் சக்தியை அவினாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்தார். இதுவரை தனது மகனை அரசுப் பள்ளியில் மட்டுமே படிக்கவைத்துள்ளதாகவும் நீதிபதி வடிவேல் கூறினார். அரசு ஊழியர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு தயங்கக்கூடாது என பரவலாக வலியுறுத்தப் பட்டு வரும் நிலையில், அதற்கு முன்னுதாரணமாகச் செயல்பட்டு வருகிறார் நீதிபதி வடிவேல். படம்: ஊடகம்
கையும் களவுமாகச் சிக்கிய திருடனுக்கு மக்கள் தர்ம அடி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மத்தளாங்குளத் தெருவில் உள்ள வாகன இயந்திரங்கள் விற்கும் கடைக்கு அன்பு என்ற இளையர் வந்தார். அங்கு மரம் அறுக்கும் இயந்திரத்தை அவர் திருடிச்செல்ல முயன்றபோது கையும் களவுமாகச் சிக்கினார். கடை உரிமையாளர் காவல் துறைக்குத் தகவல் அளித்த நிலையில், காவலர்கள் வருவதற்குள் திருடன் அன்புவை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து கடை ஊழியர்களும் பொதுமக்களும் தர்ம அடி கொடுத்தனர். இந்நிலையில், அங்கு வந்த காவலர்கள் திருடனைத் தாக்கியது குறித்து எதுவும் விசாரிக்காமல், கம்பத்தில் கட்டப்பட்டிருந்த திருடனைக் காணொளி எடுத்தனர். அதன்பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து விசாரணை நடக்கிறது.
நிதியமைச்சர்: விரைவில் குடும்பத்
தலைவிகளுக்கு ரூ.1,000 பணம்
சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார். திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதாக அறிவித்து, வெற்றியும் பெற்றுவிட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் முடிந்தபின்னரும் பணம் கிடைக்காததால் குடும்பத் தலைவிகள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நீதிபதி: கோயிலில் கடவுளுக்கு மட்டுமே முதல் மரியாதை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள வடவன்பட்டி சண்டிவீரன் கோயிலில், குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் முதல் மரியாதை தரக்கூடாது என சேதுபதி என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், "சாதி அடிப்படையில் தனிப்பட்ட ஒருவருக்கு முதல் மரியாதை அளிப்பது சட்டத்திற்கு எதிரானது," என்றவர், "கோயிலில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும். மனிதர்களுக்கு அல்ல. கோயில்களில் முதல் மரியாதை யாருக்கும் அளிக்கவில்லை என்பதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்," என உத்தரவு பிறப்பித்தார்.
கும்பகோணத்தில் திருட்டுபோன சிலைகள் அமெரிக்காவில்
கும்பகோணம்: கும்பகோணம் அருகே 60 ஆண்டுகளுக்கு முன்பு களவு போன இரு சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகுருநாதன் சுவாமி கோவிலில் இருந்து திருடப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள நார்டன் சைமன் அருங்காட்சியகத்திலும் தனித்து நிற்கும் அம்மன் சிலை அமெரிக்காவின் டென்வர் அருங்காட்சியகத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இரு சிலைகளையும் மீட்கும் பணியில் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

