புதுடெல்லி: பணமோசடி வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறும் டெல்லியில் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
கடந்த 2015 - 2016ல் டெல்லி மாநில அமைச்சராகப் பதவியில் இருந்தபோது சத்யேந்தர் ஜெயின் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் பணமோசடி, முறைகேடான பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை சத்யேந்தர் ஜெயினை அண்மையில் கைது செய்தது. அவரை இன்று வரை விசாரணைக் காவலில் வைக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் சத்யேந்தர் ஜெயினுடன் தொடர்புடைய பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இது பழிவாங்கும் நடவடிக்கை என டெல்லியில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசென் கெலாட் வீடு, அலுவலகத்தில் நேற்று காலை சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். உர ஏற்றுமதி ஊழல் தொடர்பாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற புகாரின் அடிப்படையிலும் அக்ராசென் கெலாட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனியாக விசாரணை நடந்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

