திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த நூறு பெண்கள் குவைத்தில் விற்கப்பட்டதாகவும் அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிப்பதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. இது தொடர்பாக அப்பெண்களை குவைத்துக்கு அனுப்பி வைத்த கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது.
சிறார் பராமரிப்பு, மருத்துவமனைப் பணி என்று பல்வேறு வேலை வாய்ப்புகள் இருப்பதாக கடந்த டிசம்பர் கேரளா முழுவதும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளைப் பார்த்த ஏராளமான பெண்கள், வேலை வாய்ப்பு நிறுவனம் போல் செயல்பட்ட அந்தக் கும்பலை அணுகியுள்ளனர்.
ஆனால் குவைத் சென்ற பிறகே அப்பெண்களுக்கு தாங்கள் அனைவரும் வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு அழைத்து வரப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அவ்வாறு பணிபுரிய மறுத்த பெண்களிடம், காவல்துறையில் பொய் புகார் அளித்து, வழக்கு போட்டு சிறையில் தள்ளப்போவதாக அந்த மோசடிக் கும்பல் மிரட்டியுள்ளது.
ஆனால் சில பெண்கள் மட்டும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் குவைத்தில் உள்ள மலையாளிகள் சங்கத்தின் உதவியோடும் நாடு திரும்பியுள்ளனர்.
மற்ற அனைவரும் அங்குள்ள அரபுக் குடும்பங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் பலர் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை பார்ப்பதாகவும் அண்மையில் நாடு திரும்பிய ஒரு பெண் தெரிவித்துள்ளார். மற்றொரு பெண் தன் உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்த பின்னரே ஓர் அரபுக் குடும்பம் அவரை விடுவித்துள்ளது.
"அந்த மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் குவைத் சென்றடைந்ததுமே, எங்களின் கடப்பிதழ்களை வாங்கிக் கொண்டனர். அதனால் எங்களால் வெளியே எங்கும் செல்ல முடியாது.
"என் கணவர் மலையாள அமைப்பு ஒன்றை தொடர்பு கொண்டு பேச, அவர்கள் தலையிட்டதன் பேரில் என்னால் நாடு திரும்ப முடிந்தது," என பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் கூறியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளச் செய்தி தெரிவிக்கிறது.
புதிய இடம், சூழ்நிலை காரணமாக பல பெண்கள் என்ன செய்வது என்று தவிப்புக்கு ஆளாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
சில பெண்களுக்கு தாங்கள் குவைத்தின் எந்தப் பகுதியில் உள்ளோம் என்பது கூட தெரியவில்லை என்றும் அவர்களின் நிலையை நினைத்தால் மனம் கலங்குகிறது என்றும் தபபி வந்த மற்றொரு பெண் கூறுகிறார்.
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குவைத்தில் சிக்கி இருப்பதாகக் கூறப்படுவதை அடுத்து அவர்களை மீட்க நடவடிக்கை தேவை என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

