பெங்களூரு: மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் கழிவறை இல்லாததால் தன் தாயார் சங்கடப்பட்டதை அடுத்து தன் சொந்த செலவில் பொது மக்களுக்காக நடமாடும் கழிவறை ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளார் கர்நாடக காவல்துறை உதவி ஆய்வாளர் சாந்தப்பா.
பெங்களூருவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கோரகுண்டேபாளையாவும் ஒன்று. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் முக்கிய சந்திப்பாக அமைந்துள்ள அப்பகுதியில் பொதுமக்களுக்குப் போதுமான கழிவறை வசதிகள் இல்லை.
ஒருமுறை தன் தாயாருடன் கோரகுண்டபாளையம் சென்றுள்ளார் சாந்தப்பா. அப்போது தாயார் கழிவறை பயன்படுத்த வேண்டும் என்று கேட்க, அந்தப் பகுதியில் பொதுக் கழிவறை வசதி அறவே இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
"கழிவறை இல்லை என்று அம்மாவிடம் சொல்ல முடியவில்லை. மிகவும் சங்கடமாக இருந்தது. அப்போதுதான் அந்த இடத்தில் ஒரு பொது கழிவறை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
"பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றபோதும் பலன் இல்லை. நூறு நாள்கள் முயற்சி மேற்கொண்ட பின்னர், அந்தப் பகுதியில் சொந்தச் செலவில் கழிவறை அமைக்க முடிவு செய்தேன். சில நல்ல மனிதர்களின் உதவியோடு இன்று நடமாடும் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. அதைச் சுத்தம் செய்து பராமரிக்க ஊழியர் ஒருவரையும் நியமித்துள்ளேன்," என்கிறார் சாந்தப்பா.

