சென்னை: மழைக்காலம் தொடங்குவதற்குள் சென்னையில் உள்ள கால்வாய்களில் இருந்து ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகவலை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை மழைநீர் வடிகால் துறை முப்பது நீர்வழிக் கால்வாய்களைப் பராமரித்து வருகிறது. அவற்றின் மொத்த நீளம் சுமார் 48.80 கிலோ மீட்டராகும்.
இந்தக் கால்வாய்க ளிலும் நீர்நிலைகளிலும் ஏராளமான ஆகாயத் தாமரைகள் படர்ந்துள்ளன. இவை மழைக்காலத்தில் கால்வாய் நீரோட்டத்தை தடுத்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணமாக அமைகின்றன.
இதையடுத்து கடந்த பதினைந்து நாள்களில் அடையாறு ஆறு, வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் ஆகாயத்தாமரைகள், வண்டல்கள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இந்தப் பணிக்காக நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
"இதுவரை 9,113 சதுர மீட்டர் பரப்பளவுள்ள நீர்வழித்தடங்கள் சுத்தம் செய்யப்பட்டு 430.61 மெட்ரிக் டன் அளவிலான வண்டல்கள், ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன.
"அடுத்த 15 நாள்களில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி நீடிக்கும்," என்றார் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி.

