காவல் உதவி ஆய்வாளரின் சட்டையைப் பிடித்து எச்சரித்த ரேணுகா சவுத்ரி
ஹைதராபாத்: காவல்துறையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது உதவி ஆய்வாளரின் சட்டையைப் பிடித்து எச்சரித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி மீது ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பங்கேற்ற ரேணுகா சவுத்ரி உள்ளிட்டோரைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களை வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். அப்போது உதவி ஆய்வாளர் தேவேந்திரா என்பவருடன் ரேணுகா சவுத்ரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், திடீரென அவரது சட்டையைப் பிடித்து இழுத்து எச்சரித்தார். இதையடுத்து, ரேணுகா மீது வழக்கு பதிவானது.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.70 லட்சம் மோசடி செய்தவர் கைது
திருவாரூர்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் ரூ.70 லட்சம் வரை பணம் பறித்து மோசடி செய்தவருக்கு திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் வலைவீசி உள்ளனர். திருவாரூரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் அந்த மோசடி ஆசாமியிடம் ஏமாந்துள்ளார். இதையடுத்து, அவர் காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, முகமது ரபி என்ற அந்த 52 வயது ஆடவர், 40 பேரிடம் இருந்து பணம் பறித்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது. மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள் சார்பில் போலியான பணி நியமனக் கடிதம் கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலா விசாவில் சென்று வெளிநாடுகளில் வேலை பார்ப்பது சட்டத்துக்குப் புறம்பானது என்றும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள், முகவர்களை நம்ப வேண்டாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
சிறப்பு அதிகாரம் இல்லை எனக் கைவிரித்த சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இல்லை என்பதால், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய இயலாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அண்மையில் விடுதலை செய்தது. இதையடுத்து ரவிச்சந்திரன், நளினி ஆகியோரும் தங்களை விடுதலை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினர். விசாரணையின் முடிவில், நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், உயர் நீதிமன்றத்துக்கு சிறப்பு அதிகாரம் இல்லாததால், இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.
ராகுல் காந்தி கோரிக்கையை ஏற்று விலக்கு அளித்த அமலாக்கத்துறை
புதுடெல்லி: தனது தாயார் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், விசாரணைக்காக நேரில் முன்னிலையாவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி முன்வைத்த கோரிக்கையை அமலாக்கத்துறை ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கு விசாரணைக்காக நேரில் முன்னிலையாவதில் இருந்து அவருக்கு மூன்று நாள்கள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

