சென்னை: ஒற்றைத் தலைமை என்ற முழக்கத்தால் அதிமுக தலைவர்கள் மத்தியில் ஐந்தாவது நாளாக நேற்றும் பரபரப்பு தொடர்ந்த நிலையில், "அக்கட்சியின் உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது," என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
"அதிமுகவின் பிரச்சினைகளை பாஜக தங்களுக்கு சாதகமாகப் பார்க்கவில்லை," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றைத் தலைமை கொண்டு வரப்பட்டால் இரட்டை இலைச் சின்னமே கேள்விக்குறியாகக் கூடும் என்றும் தமிழகம் முழுவதும் இருக்கும் அதிமுக தொண்டர் களிடையே இது பிளவை ஏற்படுத்த தூண்டுகோலாக அமைந்துவிடும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து கருத்து கூறுவது ஒன்றும் குற்றமல்ல என்றும் திட்டமிட்டபடி 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
உண்மையைப் பேசியதற்காக திரு ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
இதனிைடயே, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, அதிமுகவை சாதிக் கட்சியாக்க முயற்சி நடந்து வருவதாக குற்றம்சாட்டினார்.
அதிமுகவின் ஒருங்கிணைப் பாளரான திரு ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளரான திரு ஈபிஎஸ் ஆகிய இருவருமே விலகிக் கொண்டு புதிதாக ஒருவரை பொதுச் செயலாளராக நியமிக்கமுன்வர வேண்டும் என்றும் ஆறுகுட்டி வலியுறுத்தியுள்ளார்.
ஓ பன்னீர்செல்வத்தை கொங்கு இளைஞர் பேரவைக் கட்சியின் தலைவர் திரு உ.தனியரசு சந்தித்து ஆேலாசித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடியவர் ஓபிஎஸ் என்றும் ஆனால், எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு ஒற்றைத் தலைமை என்ற சூழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.
"அதிமுக தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவெடுப்பது அக்கட்சிக்கு நல்லதல்ல," என்றும் அவர் விமர்சித்தார்.
முன்னதாக பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், "ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றினால் அதிமுக அழிவுப்பாதையை நோக்கிச் செல்லும்," என எச்சரித்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்றும் ஆலோசித்தார்.
திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் சீனிவாசன், அன்பழகன், சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர், காமராஜ், தங்கமணியுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வரு வது தொடர்ந்து வருகிறது.

