தஞ்சாவூர்: கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே ரோசி, 66, என்பவர் வசித்து வந்தார். இவருக்கு என உறவினர்கள் யாரும் இல்லை.
வீட்டு வேலை செய்து வந்த இவர், பின்னர் 100 நாள் வேலையிலும் சேர்ந்து சம்பாதித்துள்ளார்.
ஒருநாள் கூட விடுப்பு போடாமல் வேலை செய்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
இந்த சூழலில், "நீ இறந்தால் உனக்கென்று யார் இருக்கிறார்கள்?" என்று கேட்டு ரோசியை சிலர் கிண்டல் செய்துள்ளனர்.
இதனால் மனம் வேதனை அடைந்த ரோசி, அங்கிருந்த ஊராட்சி ஒன்றியத்தின் அனுமதி பெற்று ரூ.50,000 செலவில் தனக்கென கல்லறை கட்டி வைத்திருந்தார்.
கல்லறையின் பின்புற வாயில் வழியாக உடலை உள்ளே தள்ளி அடக்கம் செய்யும் வகையில் அந்தக் கல்லறை வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ரோசி, வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.
இது யாருக்கும் தெரியாததால் அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு காவலர்கள் உடல்கூறு பரிசோதனைக்கு அனுப்பினர். அவரது கல்லறையிலேயே ரோசியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

