கோவை: நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிபோல், வாகனத்தை வாங்கிக்கொள்வதாக வந்தவர், வாகனத்தை ஓட்டிப் பார்த்துவிட்டு பணம் தருவதாகக் கூறி வாகனத்தோடு தப்பிச் சென்றார். சென்றவர் சென்றதுதான். திரும்பி வரவே இல்லை. பைக்கை பறிகொடுத்தவர் சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கோைவ மாவட்டம், நேரு நகரைச் சேர்ந்தவர் வினோத் சுந்தர்.இவர், தமது இருசக்கர வாகனமான பைக்கை விற்பனை செய்வதாக இணையத்தில் பதிவிட்டார்.
வாகனத்தை வாங்கிக்கொள்ள பணத்தோடு வருவதாக வினோத் திடம் ஒருவர் தொலைபேசியில் பேசினார். சூலூர் பள்ளப்பாளையத்தில் உள்ள அரவை ஆலை அருகில் வரும்படி கூற, நண்பர் சுந்தருடன் வினோத் அங்கு சென்று காத்திருந்தார். அப்போது, பைக்கை வாங்குவதாகக் கூறிய ஆடவர் அங்கு வந்து பைக்கின் பதிவுச் சான்றிதழை (ஆர் சி புக்) வாங்கிப் பார்த்தார். அதன்பிறகு பைக்கை ஓட்டிப் பார்ப்பதாகக் கூறி பதிவுச் சான்றிதழுடன் கிளம்பியவர் திரும்பி வரவே இல்லை.

