சென்னை: வரும் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட உள்ள நிலையில், அதிமுக கட்சித் தலைவர்களிடையே ஒற்றைத் தலைமை பிரச்சினை இன்னும் தணியாமல் ஆறா வது நாளாக நேற்றும் நீடித்தது.
பழனிசாமி தரப்பினர் ஒற்றைத் தலைமையையும் பன்னீர்செல்வம் தரப்பினர் இரட்டைத் தலைமைதான் தொடரவேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளனர்.
ஒற்றைத் தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் நிறைவேற்ற பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் ஆனால், தற்காலிகமாக பொதுக் குழுவை ஒத்திவைக்க பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக அவர் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை ஆகியோர் பன்னீர்செல்வத்தையும் சந்தித்து சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பன்னீர்செல்வம் வீட்டிற்குச் செல்லூர் ராஜுவும் வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தனது முடிவை தெரிவித்த பன்னீர்செல்வம், "கடந்த மூன்று ஆண்டுகளாக நான் விட்டுக்கொடுத்து சமரசம் செய்துகொண்டது போதும். இனியும் சமரசத்திற்கு இடமில்லை," என அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.
"பழனிசாமி தன் நிலைப்பாட்டை உடனடியாக அறிவிக்கவேண்டும். அப்போதுதான் சமாதானம், இல்லையென்றால் நடப்பதை பார்த்துக்கொள்ளலாம்," என்று ஓபிஎஸ் உறுதிபட கூறிவிட்டதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வரப்படாது என்பதை ஈபிஎஸ் தரப்பு உறுதியாக அறிவிக்கவேண்டும். அப்போதுதான் சமாதானம். இல்லையென்றால் நடப்பதை பார்த்துக்
கொள்ளலாம். என் வழி தனிவழிதான்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

