பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்
கரூர்: வகுப்பறையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள பங்களாபுதூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய விவகாரத்தில், இரு ஆசிரியர்களை மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆங்கில ஆசிரியர் மணிகண்டனுக்கு தலைமை ஆசிரியை சித்ரா பிறந்தநாள் கேக்கை ஊட்டி விடுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்
முதல்முறையாக வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு
நாகை: தமிழகத்தில் முதல்முறையாக நாகை மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு தனியார் நிறுவனம் சார்பில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள சீயாத்தமங்கை கிராமத்தில் 14 வீடுகளில் குழாய் வழி எரிவாயு இணைப்புகளை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். மீட்டர் கருவி மூலம் இரு மாதங்களுக்கு ஒருமுறை எரிவாயு பயன்பாட்டைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
7,300 பேருந்துகள் இயங்க உத்தரவு
சென்னை: பள்ளி மாணவர்கள், பெண்களின் நலனைக் கருத்தில்கொண்டு மாநிலம் முழுவதும் 7,300 அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, அனைத்து கிளை மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

