சென்னை: தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு, கற்பழிப்பு, கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளன.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்துடன் கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பாக பாலியல் தொடர்பான வழக்குகள் கூடுதலாக பதிவாகி இருப்பதாக காவல்துறை தெரிவித்தது.
சென்ற ஆண்டு இந்த 4 மாதங்களில் கற்பழிப்பு தொடர்பாக 137 வழக்கு பதிவானது. இவ்வாண்டு இந்த எண்ணிக்கை 148ஆக அதி கரித்துள்ளது.
பாலியல் தொந்தரவு தொடர்பான வழக்குகள் 307லிருந்து 407க்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் 13லிருந்து 20க்கும் கூடியுள்ளது.
'போக்சோ' வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. இது 879லிருந்து 1,060ஆக கூடியது.
பெண்களிடையே காவல்துறை மேற்கொண்ட விழிப்புணர்வு காரணமாக இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
"இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக புகார் கொடுக்க பெண்கள் தயங்கினார்கள். ஆனால் இப்போது அவர்களுக்காக காவல் உதவி எனும் கைபேசி செயலி தொடங்கபட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற் படுத்தி வருகின்றனர். இதற்காக ஏ.டி.ஜி.பி. வன்னியபெருமாள் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. காவல்துறை மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ள பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து துணிந்து புகார் அளிக்கின்றனர்," என்றார் அவர்.
கடந்த மே 1ஆம் தேதி வரை பெண்கள் உதவி எண் 181 மூலம் 11,778 அழைப்புகளும் குழந்தைகள் உதவி எண் 1998 மூலம் 39,758 அழைப்புகளும் 'காவலன் செயலி' மூலம் 15,246 புகார்களும் வந்துள்ளன. இவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இணையம் வழி குற்றச்செயல்கள் தொடர்பாக 6,000 புகார்கள் வந்ததாக திரு சைலேந்திர பாபு குறிப்பிட்டார்.