செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
13059620-14c6-4d65-a16f-b55271ddd985
-

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது

பூந்தமல்லி: சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி ஆகும். தற்போது பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருப்பதால் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மொத்த கொள்ளளவில் தற்போது 3475 மி. கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த நீர் இருப்பில் 95 விழுக்காடு ஆகும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து வரும் தண்ணீரோடு, மழை நீரும் சேர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

உயர் நீதிமன்றத்தில்

மீண்டும் கட்டுப்பாடு

சென்னை: கிருமித்தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் நேற்று முதல் கொரோனா நெறிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றும்படி தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, வழக்கறிஞர்கள், ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவும் கிருமி நாசினியால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யவும், தனி மனித இடைவெளியை பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைக்கு தேவைப்பட்டால் ஒழிய வளாகத்துக்குள் பொதுமக்கள் வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வளாகத்துக்குள் எந்த பகுதியிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நில அபகரிப்பு; தீக்குளிப்பு முயற்சி

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்த பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்ற திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த பெண் திடீரென்று பையில் எடுத்து வந்த பாட்டிலில் உள்ள மண்ெணண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். ஆனால் அங்கிருந்த காவல் துறையினர் அந்தப் பெண்ணை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.

விசாரணையில் அவர், பல்லடம் வேலம் பாளையம் ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்த முத்துசாமியின் மனைவி பத்மாவதி, வயது 40 என்பதும் உடன் வந்தவர்கள் அவருடைய தாயார் சுந்தரம்பாள், 70, சகோதரி மகாலட்சுமி, 45, கணவன், மகன், மகள் என்பதும் தெரியவந்தது.

பின்னர் பத்மாவதி கொடுத்த மனுவில், "எனது தந்தை வழி சொத்து சுக்கம்பாளையத்தில் 5 ஏக்கர் உள்ளது. அந்த நிலத்தில் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலையில் அந்த நிலத்தை உறவினர் ஒருவர் போலி ஆவணம் தயாரித்து அந்த நிலத்தை அபகரிக்க முயன்று வருகிறார். இது தொடர்பாக பல்லடம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது கடந்த 10ஆம் தேதி எங்கள் தோட்டத்தில் புகுந்த உறவினர் மற்றும் அவரது தரப்பினர் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் வந்தனர். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலன் இல்லை. நில அபகரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.