வேலூர் மாவட்ட ஆட்சியர்: முகக்கவசம் அணிவது கட்டாயம்
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளனார். "கிருமிப் பரவல் அதிகமாகிறது. இதனைத் தடுப்பதற்காக சில நடவடிக்கையை எடுத்துள்ளோம். பேருந்துகள், சந்தைகள் உள்ளிட்ட கூட்டம் அதிகமாக உள்ள இங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்," என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கிருமிப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாட்டில் இருந்து வந்த மூவர் உள்பட 686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுமில்லை.
கனிமொழிக்கு மீண்டும் பாதிப்பு
சென்னை: திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட கனிமொழி இப்போது இரண்டாவது முறையாக மீண்டும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் அவர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.
எம்ஜிஎம் குழுமத்தில் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் எம்ஜிஎம் குழுமத்துக்குச் சொந்தமான நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஎம் குழுமம் ரூ.400 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் இதற்கு போலியான ரசீதுகளைப் பயன்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கில் வராத மூன்று கோடி ரூபாய் பணம், இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
600 கைபேசி கோபுரங்களைக் காணவில்லை என புகார்
ஈரோடு: தமிழகத்தில் செயல்பாட்டில் இல்லாத 600 கைபேசி கோபுரங்களைக் குறிவைத்து திருட்டு நடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் இந்தக் கைேபசி கோபுரங்கள் காணாமல் போயுள்ளதாக பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் புகார் அளித்தன. ஒரு கைபேசி கோபுரத்தை அமைப்பதற்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை செலவாகும் எனவும் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

