சென்னை: முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சென்னை மாநகரின் தண்ணீர்த் தேவையை ஈடுகட்டும் புழல், பூண்டி ஏரிகளில் இருந்து நீர் திறப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் அதிகபட்ச நீர்மட்டம் 25 அடியாகும். இதன் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியின் நீர்மட்டமும் மளமளவென உயர்ந்து இப்போது 23.36 அடியை எட்டியுள்ளது.
நீர் இருப்பு 3,475 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 1,700 கன அடி நீர் ஏரிக்கு வந்தது. இதனால் ஏரியில் இருந்து உபரி நீரை திறந்துவிடுவது என அதிகாரிகள் முடிவு செய்தனர்.
மேலும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஏரியில் இருந்து 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
இதையடுத்து ஏரியின் கரையோரம் அமைந்துள்ள சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோடைக் காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி இருப்பது சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
இதற்கிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாகப் பெய்துவரும் மழையால் அங்குள்ள பூண்டி, புழல், தேர்வாய் கண்டிகை உள்ளிட்ட ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.
இதேபோல் தமிழகத்தில் மேலும் பல்வேறு பகுதிகளில் ஓரிரு தினங்களுக்கு ஒருமுறை மழை பெய்து வருகிறது.

