சென்னை: தேர்வு முடிவுகளில் தமிழை வெறுமனே மொழிப்பாடம் எனக் குறிப்பிட்டிருப்பதை ஏற்க இயலாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' எனும் முழக்கத்தை முன்வைத்து ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள திராவிட ஆட்சியாளர்கள், தமிழை வளர்க்கும் லட்சணம் இதுதான் என்று தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும்போது பாடங்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடாததும் தமிழ் மொழிப்பாடத்தை வெறுமனே மொழிப்பாடம் என்று மட்டும் பதிவு செய்திருப்பதும் கண்டனத்திற்குரியது.
"தமிழைப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி, வெட்கக்கேடு," என்று காட்டத்துடன் குறிப்பிட்டுள்ளார் சீமான்.

