பெரம்பலூர்: பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், இந்த ஆண்டும் நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்கள் மாநில அளவில் கல்வியில் முன்னிலை வகிக்கும் மாவட்டங்களின் பட்டியலில் முதல், இரண்டாம் இடங்களைப் பிடித்துள்ளன.
இம்முறை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இரண்டாம் இடமும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இடமும் பிடித்துள்ளது பெரம்பலூர் மாவட்டம்.
தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று பெரம்பலூர். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு பொதுத்தேர்வுகளில் இம்மாவட்டம் பெரிதாக ஏதும் சாதித்ததில்லை.
பின்னர் அங்குள்ள அரசுப் பள்ளிகளின் செயல்பாட்டில் முன்னேற்றம் உண்டானது.
தேர்வு தேர்ச்சி விகிதத்தில் முன்னேறிய மாவட்டங்களுடன் போட்டியிடுவதில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு, இப்போது பெரும் சாதனையாக முதல் இடம் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் மாநில அளவில் பெரம்பலூருக்கு எட்டாம் இடம்தான் கிடைத்தது. இந்த முறை 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் இடமும் பத்தாம் வகுப்பு தேர்வில் இரண்டாம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளது பெரம்பலூர் மாவட்டம்.
கடந்த 2011ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 29ஆவது இடத்தில் இருந்த பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த அபார வளர்ச்சிக்கு அங்கு கல்வித்துறையில் பணியாற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள்தான் முக்கிய காரணம் என பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பில் நூறு விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள தாக கல்வித்துறை தெரிவித்தது.

