தொடர் மின்வெட்டு எனப் புகார்: நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு
சென்னை: தொடர் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்திருப்பதை அடுத்து, பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். பாதாள சாக்கடைத் திட்டம், கம்பி வடம் புதைப்பது போன்ற பணிகளால் பல இடங்களில் மின்தடை ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார். நேற்று சென்னையை அடுத்துள்ள தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்களிடம் அவர் கோரிக்கை மனுக்களை பெற்றார். அவற்றிலும் பெரும்பாலான மனுக்கள் மின்தடை குறித்து இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சென்னை மழை: 10 மரங்கள் சாய்ந்தன
சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை விட்டு விட்டு பெய்த மழை காரணமாக, நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்ததாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது. இதையடுத்து, அவை துரித கதியில் அகற்றப்பட்டன. இதேபோல் மழைநீர் தேங்கிய இடங்களுக்கு நேற்று காலை ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டதால் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முறைகேடு: முதல்வருக்கு புகார் கடிதம்
சென்னை: உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிய குழு அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். தற்போது நிர்வாகச் சீர்கேடுகளால் இந்நிறுவனம் தன் பெருமையை இழந்து நிற்பதாக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். "தமிழில் உயர் ஆய்வுகளை செய்து கருவி நூல்களை உருவாக்குவதே இந்நிறுவனத்தின் முதன்மையான பணியாகும். இப்பணியினை இந்நிறுவனம் சிறப்பாக செய்து வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நிறுவனத்தின் ஆய்வுச் சூழல் முற்றிலும் முடங்கிப் போனது," என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முறைகேடுகள் நடப்பதாக தாம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் விவரித்துள்ளார்.
இரு கோவில்களில் 22 சாமி சிலைகளை சேதப்படுத்தியவர்களுக்கு வலைவீச்சு
காஞ்சிபுரம்: திருப்பெரும்புதுார் அருகே உள்ள துளசாபுரம் கிராமத்தில் இரண்டு கோவில் களில் உள்ள 22 சாமி சிலை களை மர்மக் கும்பலைச் சேர்ந்தவர்கள் உடைத்து சேதப்படுத்தி இருப்பதைக் கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன் தினம் அந்த சிலைகள் சாலை யில் வீசப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் காவல்துறை யில் புகார் அளித்தனர். நேற்று முன்தினம் அப்பகுதியில் இரவு முழுவதும் கனமழை பெய்ததுடன் மின்தடையும் ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிலர் சிலைகளைச் சேதப்படுத்தி உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக திருப்பெரும்புதுார் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுனில் தெரிவித்துள்ளார்.

