காஞ்சிபுரம்: ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணிப் பெண் மருத்துவர் ஒருவர் 60 முட்டைகள் மீது 80 நொடிகள் அமர்ந்து கடினமான ஆசனத்தை செய்து காட்டியது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வீரகாளியம்மன் பகுதியைச் சேர்ந்தவர் ஒன்பது மாத கர்ப்பிணியான சித்த மருத்துவர் டாக்டர் பானுப் பிரியா சரத்குமார்.
இவர், தனது ஏழு வயது முதல் யோகா மீது அளவில்லாத ஆர்வம் கொண்டு, அதனை முறையாகப் பயிற்சி பெற்று பல்வேறு போட்டி களிலும் கலந்துகொண்டு முத லிடத்தைப் பெற்று பரிசுகளை மாநில அளவில் பெற்றுள்ளார்.
இவரது திறமையைக் கண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதா இவருக்கு நினைவுப் பரிசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற எட்டாவது தேசிய யோகா தினத்தை முன்னிட்டு இவர் மக்களிடையே விழிப்புணர்வூட்ட திட்டமிட்டார்.
தற்போது இவர், மருத்துவர் மற்றும் பயிற்சியாளரின் ஆலோச னையின்படி தனது வீட்டில் 60 முட்டைகளின் மீது அமர்ந்து எண்பது நொடிகள் பத்மாசனம் மேற்கொண்டு யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதுகுறித்து மருத்துவர் பானுப் பிரியா சரத்குமார் கூறுகையில், கடந்த இரண்டாண்டு கொவிட்-19 காலகட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கைபேசி, கணினி என திசைமாறிச் சென்றனர். இக்காலகட்டத்தில் யோகா பயிற்சிகளை மேற்கொண்டு தனது மன அழுத்தத்தைக் குறைக்க பயிற்சி மேற்கொண்டு இருக்கலாம்.
தற்போது யோகா பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே தான் ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணி என்றபோதும், மருத்துவர் மற்றும் பயிற்சியாளரின் ஆலோசனைப்படி இந்த நிகழ்வை நடத்தியதாக தெரிவித்தார்.
பேறுகாலத்தில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி யோகா பயிற்சி மேற்கொண்டு மனஅழுத்தம், உடல் நலத்தைப் பாதுகாக்கலாம் என ஆலோசனை தெரிவித்தார். முட்டை மீது ஆசனப் பயிற்சி செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

