சென்னை: பொதுக்குழுவை நடத்த லாம் என அதிமுகவுக்கு அனுமதி அளித்திருந்த சென்னை உயர் நீதிமன்றம், ஒற்றைத் தலைமை உள்ளிட்ட தனித் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு தடை விதித்தது.
இது, அதிமுக துணை ஒருங் கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஆனால், அதேவேளையில், "நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்குக் கிடைத்த வெற்றி," என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன்பு பட்டாசு வெடித்து உற்சாக முழக்கமிட்டனர்.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இரட்டைத் தலைமைக்குப் பதிலாக ஒற்றைத் தலைமையைக் கொண்டுவர பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டிருந்தது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அச்சம் தெரிவித்தனர்.
இந்நிலையில், அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ராம்குமார், சுரேஷ் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வழக்கை விசாரித்தார்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, அதிமுக பொதுக் குழுவைத் திட்டமிட்டு நடத்தலாம் என்று உத்தரவிட்டார்.
"கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது. ஒரே தலைமையை உருவாக்குவதற்கான சட்டங்களைத் திருத்துவது தொடர்பாக அதிமுக பொதுக்குழுவை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது," என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறினார்.
இதேபோல், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனிடையே, பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தின் முன் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை ஒரு தரப்பினர் சேதப்படுத்தி பிரச்சினையை ஏற்படுத்தினர்.
திரு பன்னீர்செல்வத்துக்கு தலைமைப் பொறுப்பை வழங்காவிட்டால் சேலம் ரயில்வே நிலையத்துக்கு குண்டு வைக்கப்போவதாக சந்தேக நபர்கள் கூறியதைத் தொடர்ந்து, மோப்ப நாயுடன் சென்று சோதனை செய்தபோது அது புரளி என தெரியவந்தது.
பரபரப்பான சூழ்நிலையில், மண்டபத்தைச் சுற்றிலும் 2,000 காவலர்கள் குவிக்கப்பட்டதாக தகவல்கள் கூறின.
தற்காலிக அவைத்தலைவராக உள்ள தமிழ்மகன் உசேன் கட்சி யின் அவைத் தலைவராக பொதுக் குழு தேர்வு செய்ததைத் தொடர்ந்து, ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
இதனிடையே, "ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டும் திட்டம் இல்லை. பொதுக்குழு உறுப்பினர் களின் கோரிக்கையை ஏற்காவிட் டால் தனிமைப்படுத்திக்கொள்ள நேரிடும்," என்று முன்னாள் அமைச் சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
பரபரப்பான சூழலில் கூடிய அதி முக பொதுக்குழு கூட்டம் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் சலசலப்புடன் நிறைவுபெற்றது.

