தேனி: அரசுப் பேருந்து மோதி தனது வலது காலை இழந்த ராணுவ வீரருக்கு ரூ.1 கோடியே 68 லட்சத்தை இழப்பீடாக வழங்கும்படி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், வேம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர பாண்டியன், 37. முன்னாள் ராணுவ வீரர். கடந்த 2018ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது விடுமுறைக்காக மனைவியின் சொந்த ஊரான திருச்சிக்கு வந்திருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் திருச்சி, மண்டையூர் பகுதிக்குப் பயணம் சென்றுகொண்டிருந்தபோது தனசேகர பாண்டியன் மீது அரசுப் பேருந்து மோதியது. இதில், அவரது வலதுகால் நசுங்கியது. அறுவை சிகிச்சை மூலம் அவரது கால் துண்டிக்கப்பட்டது.
அதன் காரணமாக, ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அதையடுத்து, தனக்கு நஷ்ட ஈடு கோரி அரசுப் போக்குவரத்துக் கழகம் மீது திருச்சி நீதிமன்றத்தில் தனசேகர பாண்டியன் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சோமசுந்தரம், பாதிக்கப்பட்ட ராணுவ வீரருக்கு அரசுப் போக்கு வரத்துக் கழகம் 1 கோடியே 68 லட்சம் ரூபாய் நஷ்டஈடாக வழங்கு வதற்கு உத்தரவிட்டார்.
தனசேகரன் பாண்டியனுக்கு இன்னும் 13 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்புள்ள நிலையில், விபத்து நடந்துள்ளது. எனவே, 13 ஆண்டு சம்பளம், மருத்துவச் செலவுகளைக் கணக்கிட்டு அதன் அடிப் படையில் ரூ.1 கோடியே 68 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டதாக வழக்கறிஞர் முத்துமாரி தெரிவித்தார்.

