சென்னை: சென்னை கே.கே. நகரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் வங்கி மேலாளர் பலியானார். இந்த விபத்தில் இருவா் காயமடைந்தனா்.
சென்னை போரூர், மங்கலம் நகரைச் சேர்ந்தவர் வாணி கபிலன், 57. இவர், கே.கே. நகர் லட்சுமணசாமி சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
அத்துடன், இவர் ஒரு தமிழ் எழுத்தாளரும்கூட. பல்வேறு கவிதைத் தொகுப்பு புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
இந்நிலையில், வெள்ளியன்று மாலை பணி முடிந்தவுடன் தனது காரின் பின்புறத்தில் அமர்ந்து தங்கை எழிலரசியுடன் தனது வீட்டிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அவர்களது கார் கர்நாடக வங்கி அருகே வந்தபோது திடீரென அங்கிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து காரின் பின்பக்கத்தில் விழுந்தது.
இதில் பின்பக்கத்தில் அமர்ந்திருந்த வாணி கபிலன் உயிரிழந்தார்.
அவரது தங்கை எழிலரசியும் கார் ஓட்டுநர் கார்த்திக்கும் காயத்துடன் தப்பினர். அவர்கள் கேகே நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த கனமழை காரணமாகவும் மண்ணின் ஈரத்தன்மை காரணமாகவும் மரம் விழுந்துள்ளது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

