செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
79b2338a-85d0-4795-aa71-a78a7f0299cf
தலைமை ஆசிரியர் எபினேசர் (பின்புறம் நிற்பவர்) தனது சொந்த செலவில் முடிதிருத்துபவர்களைப் பள்ளிக்கு வரவழைத்து விதவிதமாக தலைமுடியை வெட்டியிருந்த மாணவர்களின் தலைமுடியை திருத்திவிடச் செய்தார். படம்: தமிழக ஊடகம் -

மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முடிதிருத்தம்

காட்பாடி: வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள 160 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஊரீசு என்ற பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சிலர், ஒரே சீராகத் தலைமுடியை வெட்டிக் கொள்ளாமல், 'புள்ளிங்கோ கட்டிங்', 'ஸ்பைக் கட்டிங்' என விதவிதமான தலை அலங்காரத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முடிதிருத்தம் செய்து விடப்பட்டது. அண்மையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், தலைமுடியை சீராக வெட்டாத மாணவர்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

484 பேரிடம் ரூ.2 கோடி மோசடி

மதுரை: மதுரையில் 484 பேரிடம் ரூ.2 கோடி அளவுக்கு 'பிட்காயின்' மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்களிடம் பிட்காயினில் முதலீடு செய்தால் பெருத்த லாபம் பார்க்கலாம் என்று கூறி சென்னையைச் சேர்ந்த இருதயராஜ் உள்ளிட்ட நால்வர் கொண்ட கும்பல் மோசடி செய்துவிட்டதாக ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருமண விழாவில் வெடி விபத்து

தூத்துக்குடி: தூத்துக்குடி தருவைகுளத்தில் திருமண விழாவில் வெடி வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன. சிங்கராம் என்பவர் வெடி வெடித்தபோது அந்த வெடியில் இருந்த தீப்பொறி ஒரு இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிகள் மீது விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிங்கராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.