சென்னை: தமிழ்நாட்டின் மிக முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் இரு பெரும் தலைவர்களுக்கு இடையில் மூண்டு இருக்கும் நீயா நானா சவால் காரணமாக இரட்டை இலை சின்னத்திற்குச் சோதனை ஏற்பட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
தமிழகத்தில் காலியாக உள்ள 510 உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஜூலை 9ஆம் தேதி தேர்தல் நடக்கும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 27ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற இன்றே கடைசி நாளாகும். மொத்தம் உள்ள 510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கும் என்பதால் கட்சி வேட்பாளர்களை அங்கீகரித்து படிவங்களில் கையெழுத்திடுவதில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டு இருக்கிறது.
வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கான காலஅவகாசம் முடிவதற்கு முன்பாக படிவங்களைத் தாக்கல் செய்தால் சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது. அந்தக் காலஅவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைகிறது.
அதற்குள்ளாக கட்சித் தலைமை கையொப்பமிட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லை என்றால் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போகக்கூடிய சூழ்நிலை ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவர்கள் சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியிட முடியும்.
இதனிடையே, அதிமுக பொதுக் குழு தொடர்பில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவை எதிர்த்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதிமுகவின் பொதுக்குழுவில் தலையிட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் அதிமுக அவைத் தலைவர், பொதுக்குழு உறுப்பினர்களின் ஒட்டுமொத்த கருத்தைப் பொறுத்தே தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்படும் என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.
ஆகவே பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் மாதம் 22ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தை ஈபிஎஸ் தரப்பு கேட்டுக்கொண்டது.
இச்சூழலில், அதிமுகவின் முன்னாள் தலைவியும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் அணுக்கத் தோழி சசிகலா, அடுத்த கட்டமாக நான்கு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தொண்டர்களைச் சந்திப்பார் என்று அவரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் கிடைக்காமல் போகும் நிலை

