செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
8f8ebeac-d251-43bc-942b-e683ec48ff1c
-

தங்கம் கடத்தல்: கைது, விசாரணை

சென்னை: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 'ஏர் ஏசியா' விமானத்தில் சென்னை வந்த முகம்மது ஹனீபா என்பவரும் பேங்காக் நகரில் இருந்து அதே நிறுவன விமானத்தில் வந்த முகம்மது ஆசிக் என்பவரும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த 11 பேரும் விசாரிக்கப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களின் உடைமைகள் சோதனையிடப்பட்டதில் 1.04 கோடி ரூபாய் மதிப்பிலான 2.265 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. முகம்மது ஹனீபா கைது செய்யப்பட்டார். மற்றவர்களிடம் விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

சாலை விபத்து நால்வர் பலி

அறந்தாங்கி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நிகழ்ந்த மணல் லாரி-மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில், சித்திக், 30, பகவான், 32, ஆரோக்கிய செல்வம், 30, செல்வம், 30, ஆகிய நால்வர் மாண்டதாகவும் விபத்து தொடர்பில் சரத்குமார், 40, என்ற லாரி ஓட்டுநர் கைதானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டுத் தீயை அணைக்க முயற்சி

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வனச்சரகப் பகுதிகளில் காட்டெருமை, புலி, யானை, மான் என பல்வேறு விலங்குகள் வாழ்கின்றன. அந்தக் காட்டுப் பகுதியில் பல இடங்களில் ஆங்காங்கு எரியும் தீ, பலத்த காற்றால் பல்வேறு பகுதிகளுக்கும் பரவிவருவதால் அரிய புல்வகைகள், மூலிகைச் செடிகள், மரங்கள், வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த, முதற்கட்டமாக தீ தடுப்பு, வனக்காவலர்கள் அடங்கிய ஆறு பேர் குழு அங்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சாராயக் கடையை அழித்த மாதர்கள்

நாகை: நாகை அருகே கீழ கண்ணாப்பூரில் இயங்கிவந்த சாராயக்கடையை மாதர் சங்க பெண்கள் அடித்து நொறுக்கினர். சாராயம் விற்பனை செய்த முத்துகிருஷ்னன் என்பவர் தப்பியோடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சாராய போத்தல்களையும் பாத்திரங்களையும் மாதர் சங்க பெண்கள் தூக்கி வீசி உடைத்ததாகவும் நேற்று தகவல்கள் கூறின.

'தேடித்தேடி நிறைவேற்றி வருகிறோம்'

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.129.56 கோடி மதிப்பில் முடிவுற்ற 28 திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

மக்களின் ஒவ்வொரு தேவையையும் தேடித்தேடி நிறைவேற்றி வருவதுதான் திமுக ஆட்சி என அப்போது முதலமைச்சர் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்திற்குக் கடந்த ஓராண்டில் அரசு செய்த நலத்திட்ட உதவிகளைப் பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

முட்டைவிலை கூடியது; அதிர்ச்சி

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் அன்றாடம் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.

கடந்த 12 நாள்களில் பண்ணையில் முட்டை கொள்முதல் விலை 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சில்லரைக் கடைகளில் முட்டை ஒன்றின் விலை ரூ.6 முதல் 6.50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கீழடியில் சுடுமண் கிண்ணங்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல்துறை 8ஆம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழடியில் எட்டு குழிகளும் அகரம், கொந்தகையில் தலா நான்கு குழிகளும் தோண்டப்பட்டு நீண்ட வடிவ தாயக்கட்டை, பானை, உலைகலன், பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கீழடியில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் மேற்புறம் 10 செ.மீ. உயரத்திற்குக் கறுப்பு நிறமும் கீழ்ப்புறம் சிவப்பு நிறமும் கொண்ட சுடுமண் கிண்ணங்கள் (படம்) அகப்பட்டன. புனல் போன்ற அமைப்பு கொண்ட இந்த கிண்ணங்கள் சாயம் காய்ச்சுவதற்குப் பயன்பட்டு இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.