சென்னை: தமிழ்நாட்டில் கொவிட்-19 தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளைப் பிறப்பித்து அவற்றைப் பின்பற்றும்படி சுகாதாரத்துறை கடும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உருமாறிய ஓமிக்ரான் வகை கிருமி பெருமளவில் பரவி வருகிறது. இதன் காரணமாக நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், தடுப்பூசி போடுதல் ஆகியவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அலுவலகத்திற்கு வரக்கூடிய அனைவருக்கும் உடல் வெப்பப் பரிசோதனை கட்டாயமாக வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தோர் எண்ணிக்கை கடந்த 21ஆம் தேதி 4,366 ஆக இருந்தது. இது செவ்வாய்க்கிழமை 8,970 ஆகிவிட்டது. ஒரே வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு ஆகிவிட்டது என்பதைச் சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியது.
வணிக வளாகங்கள், சந்தைகள் அல்லது பிற பொது இடங்களுக்குச் சென்றுவந்தவர்களில் 26%க்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
பணியிடங்களில் 18%, பயணத்தின் போது 16%, கல்வி நிறுவனங்கள், விடுதிகள் அல்லது பயிற்சி மையங்களில் 12% பேர் தொற்றுக்கு ஆளாகிவிட்டதாக சுகாதாரத் துறை ஆய்வு தெரிவிக்கிறது.
இதனிடையே, சென்னை மருத்துவக் கல்லூரியில் இரத்த நன்கொடை முகாமைத் தொடங்கி வைத்துப் பேசிய மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கொரோனா தொற்றியோரில் 8% மட்டுமே மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் மற்றவர்களுக்கு இலேசான பாதிப்பு மட்டும்தான் இருப்பதாகவும் கூறினார்.
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் பகுதிகளில் தொற்று அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

