சென்னை: இந்திய அதிபர் தேர்தல் வேட்பாளர் யஷ்வந்த் சின்கா இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்திக்கிறார்.
தேர்தலில் தம்மை ஆதரிக்கும்படி அந்தச் சந்திப்பின்போது முதல்வரை திரு சின்கா கேட்டுக்கொள்வார் என்று நேற்று தகவல்கள் தெரிவித்தன. இந்திய அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடக்கிறது.
அந்தத் தேர்தலில் மத்திய ஆளும்கட்சியான பாஜக தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரவுபதி முர்மு களமிறங்குகிறார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா வேட்பு மனுத் தாக்கல் செய்து இருக்கிறார்.
யஷ்வந்த் சின்கா பல அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரே சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இதையொட்டி அவர் இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோருவார் என்று தகவல் கூறியது.
அதிபர் தேர்தலில் பாஜக ஆதரிக்கும் வேட்பாளர் திரவுபதி முர்முவே வெற்றி பெறுவார் என்று நம்பப்படுகிறது.

