ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை யில் உள்ள பணப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில், ரூ.400 கோடி செலவில் காலணிகளைத் தயாரிக்கும் மாபெரும் பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்தார்.
திருப்பத்தூர், வேலூர், ராணிப் பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர், முடிவுற்ற பணி களைத் திறந்துவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ராணிப்பேட்டையில் நேற்று நடந்த விழாவில், ஏறக்குறைய 60,000 பயனாளிகளுக்கு ரூ.250 கோடி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதை தொடங்கி வைத்து முதல்வர் பேசினார்.
"நரிக்குறவர் வீடுகளுக்குச் சென்று நான் விளம்பரம் தேடிக் கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. 50 ஆண்டுகளாக அரசியலில் உள்ள எனக்கு ஏன் விளம்பரம்? விளம்பரத்திற்காக திமுக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை," என்றார்.
ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தையும் திறந்துவைத்தார்.
இந்த வளாகத்துக்கு விடுதலைப் போராட்ட வீரரும் அறிஞருமான ஜமதக்கனியின் பெயரைச் சூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னதாக கோரி யிருந்தார். அதன்படி, ஜமதக்கனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விடுதலைக்காகப் போராடி அதிக காலம் சிறைத் தண் டனை அனுபவித்தவர் ஜமதக்கனி. மார்க்ஸ் எழுதிய 'டாஸ் கேப்பிடல்' நூலை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் அவர்தான் என்றும் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ராணிப்பேட்டை காரைக்கூட் சாலைப் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் திடீர் ஆய்வு நடத்திய முதல்வர், பணி நேரத்தில் இல்லாத விடுதி கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

