புதுச்சேரி: தான் ஒரு சாமியார் என்றும் வயிற்றுவலியைக் குணப் படுத்தி பெண்ணின் கணவரைக் காப்பாற்றுவதாகவும் கூறி 37 பவுன் தங்க நகை, ரூ.12 லட்சத்தை மோசடி செய்த போலி பெண் சாமியார் கைது செய்யப்பட்டார்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் முருகன், 45, மின்சாரப் பொறியாளர். இவரது மனைவி லட்சுமி, 35. வீட்டில் தையல் எந்திரம் வைத்து துணி தைத்துக் கொடுத்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
லட்சுமியுடன் அவரது மாமனார் துரைராஜன், மாமியார் உதயகுமாரி ஆகியோரும் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2020ல் லட்சுமியின் வீட்டுக்கு வாடகைக்கு குடிபுகுந்தார் சத்தியவதி, 26.
ஒருசமயம், லட்சுமியின் கணவர் முருகனுக்கு வயிற்றுவலி ஏற்பட, தான் ஒரு மந்திரவாதி என வும் முருகனுக்கு ஏற்பட்ட வயிற்று வலியைப் பரிகாரம் மூலம் சரிசெய்து விடலாம் எனவும் சத்தியவதி கூறியிருக்கிறார்.
இதனை நம்பிய லட்சுமி தனது கணவருக்குத் தெரியாமல் பூசைக் கான ஏற்பாடுகளைச் செய்தார். பூசையின்போது பணம், நகைகளை வைக்கும்படி கூறியதால் லட்சுமி அதன்படி செய்தார். இப்படி பல நாள் பூசை செய்தும் முருகனின் உடல்நிலை சீராகவில்லை. இந் நிலையில் முருகனுக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியவர, அதற்கான சிகிச்சை எடுத்தபோது வயிற்றுவலி குணமாகிவிட்டது.
ஆனால், தான் செய்த பரிகார பூசையால்தான் முருகனின் வயிற்றுவலி குணமானது என்று கூறினார் சத்தியவதி.
இந்நிலையில் லட்சுமியின் மாமனார் துரைராஜனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட, இதேபோல் பரிகார பூசை செய்யப்பட்டது. ஆனால், துரைராஜன் உயிரிழந்தார்.
இதையடுத்து, எங்கே தான் சிக்கிக்கொள்வோமோ எனப் பயந்து போன சத்தியவதி வீட்டைக் காலி செய்துவிட்டு தலைமறைவானார்.
அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லட்சுமி, பரிகார பூசையின் பெயரில் பணம், நகைகளைப் பறிகொடுத்தது குறித்து கோரிமேடு காவல்துறையில் புகார் அளித்தார்.

