செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
35aa8730-7db0-4dae-9d0d-3a238d6701fa
-

130 கிலோ 512 கிராம் தங்கம் வங்கியில் ஒப்படைப்பு

திருவள்ளூர்: பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய 130 கிலோ 512 கிராம் தங்கத்தை பாரத ஸ்டேட் வங்கி அதிகாரியிடம் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஒப்படைத்தார். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் காணிக்கையாகக் கிடைத்த தங்கத்தை வங்கியில் முதலீடு செய்வதால் கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நால்வர் தனுஷ்கோடியில் தஞ்சம்

ராமநாதபுரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, வவுனியா மாவட்டத்தில் இருந்து படகு மூலம் வந்த நால்வர் நேற்று காலை அகதிகளாக தனுஷ்கோடி அருகே தஞ்சம் அடைந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரிடமும் ராமேஸ்வரம் கடற்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் நால்வரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள். தற்போது வரை இலங்கைத் தமிழர்கள் 96 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனுக்கு 'கோல்டன் விசா'

சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு சிற்றரசு 'கோல்டன் விசா' வழங்கியுள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு நீண்டகால குடியுரிமையை வழங்கும் விதமாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 'கோல்டன் விசா' வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஷாருக்கான், அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்ட பலருக்கும் இந்த விசா வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கமல்ஹாசனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

தனது குட்டிகளை உப்புமூட்டை சுமந்தபடி வந்த கரடி; மக்கள் பயம்

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கன்னிகாதேவி காலனிப் பகுதியில் தனது இரண்டு குட்டிகளையும் முதுகில் உப்பு மூட்டைபோல் சுமந்தவாறு கரடி ஒன்று உலா வந்ததைக் கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனை காணொளியாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். கரடிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் வாகனங்களில் செல்ல அச்சமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள பொதுமக்கள், அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். படம்: தமிழக ஊடகம்