மதுரை: இந்து கோயில் விழாக்களில் மற்ற மதத்தவர்கள் பங்கேற்கத் தடை விதிக்கமுடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்ைதச் சேர்ந்த சி.சோமன் என்பவர் தொடர்ந்த வழக்கில் இதுபோல் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் நாளை 6ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்.
குடமுழுக்கு விழா அரசு விழாவாக நடைபெறும்போது வழக்கமான சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படாமல் கோயிலின் புனிதம் கெடுவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே, இவ்விழாவில் இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு பிறப்பித்த உத்தரவு: ''இந்துக் கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய வேண்டாம் என அறிவிப்பு பலகைகள் கோயில்களின் முன்பு வைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் குட முழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என இந்து சமய அறநிலையத் துறை விதிகளில் கூறப்படவில்லை. 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், இறை நம்பிக்கை கொண்டவர்கள் கோயிலுக்குச் செல்லும்போது, அவர்களின் மதத்தை உறுதி செய்வது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
''பிரபல பாடகர் யேசுதாஸ் வேறு மதத்தைச் சேர்ந்தவர்தான். இருப்பினும் அவர் ஏராளமான இந்து கடவுள் பாடல்களைப் பாடியுள்ளார். அவரது பாடல்கள் கோயில்களில் ஒலிக்கப்படுகின்றன. வேளாங்கண்ணி தேவாலயத்திற்கும் நாகூர் தர்காவிற்கும் ஏராளமான இந்துக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.
"எனவே இந்த விவகாரத்தை பரந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

