மியன்மார்: இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் வசித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பி மோகன் என்ற ஆட்டோ ஓட்டுநரும் எம். அய்யனார் என்ற வியாபாரியும் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மோரே என்ற இடத்தில் இருந்து மியன்மாருக்குச் சென்றனர்.
அப்போது தமு என்ற இடத்தில் அவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் கூறின. மோகனுக்குச் சில மாதங்களுக்கு முன்தான் திருமணம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மோகன், அய்யனார் இருவரின் உடல்கள் தமு நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ளன.
மியன்மார் ராணுவ அரசுடன் தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்டுள்ள இந்திய அரசு, உடல்களைத் தாய்நாட்டுக்குக் கொண்டு வர முயற்சி எடுத்துள்ளது.
இதனிடையே, இது பற்றி கருத்து கூறிய மோரே தமிழ் சங்கத்தினர், அவ்விருவரும் மியன்மார் எல்லைக்குள் நுழைந்ததால், அவர்களை உளவாளிகள் எனக் கருதி அந்நாட்டு ராணுவத்தினர் சுட்டுக் கொன்று இருக்கலாம் என்றனர்.
மோகனும் அய்யனாரும் தங்கள் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக உரிய அனுமதியின்றி எல்லைத் தாண்டி சென்றதாகக் கூறப்படுகிறது.

