சென்னை: தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் மிக விரைவில் பேரங்காடிகளில் கிடைக்கக்கூடிய அனைத்து மளிகைப் பொருள்களும் விற்பனைக்கு வரும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம் ரேசன் கடைகள் உள்ளன. அவற்றுள் சுமார் பத்தாயிரம் கடைகள் பகுதி நேரமாக மட்டுமே இயங்குகின்றன.
இந்தக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சீனி, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் ஆகியவை வழங்கப்படுகின்றன. சில கடைகளில் மட்டுமே இப்பொருள்களுடன் தேநீர்த் தூள், உப்பு ஆகியவையும் விற்கப்படுகின்றன.
கூட்டுறவுக் கடைகளில் சில மளிகைப் பொருள்கள் விற்கப்படுகின்றன என்றாலும் போதுமான இட வசதி இல்லாததால் இந்த விற்பனையை விரிவுபடுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரேசன் கடைகளை நவீனப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக, இனி ரேசன் கடைகளில் பேரங்காடிகளில் கிடைக்கும் பெரும்பாலான மளிகைப் பொருள்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ரேசன் கடைகளுக்குச் சொந்தக் கட்டடம் கட்டுவது, பொருள்கள் அனைத்தும் தடையின்றி போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வது, பொதுமக்களின் கருத்துகளையும் குறைகளையும் கேட்டு அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது என அதிகாரிகள் மாநிலம் முழுவதும் வலம் வருகின்றனர்.
"முதற்கட்டமாக ரேசன் கடைகளில் அனைத்து வகை மளிகைப் பொருள்களும் விற்கப்படும். அதற்கு பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அடுத்தக்கட்ட விரிவாக்கம் நடைபெறும்.
"ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காக 20 முதல் 25 ரேசன் கடைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன," என்கிறார்கள் அதிகாரிகள்.