சென்னை: காலஞ்சென்ற நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை வெடித்துள்ளது.
தங்களுடைய சகோதரர்களான திரைப்பட நடிகர்கள் பிரபுவும் ராம்குமாரும் குடும்பச் சொத்துகளில் தங்களுக்குரிய பங்கைத் தராமல் ஏமாற்றிவிட்டதாக சிவாஜி கணேசனின் இரு மகள்களும் புகார் எழுப்பி உள்ளனர்.
மேலும், தங்களுக்குத் தர வேண்டிய ஆயிரம் பவுன் நகைகளை சகோதரர்கள் அபகரித்துக் கொண்டதாகக் கூறியுள்ள இருவரும் இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகி உள்ளனர்.
இதனால் திரையுலகத்தினர், சிவாஜி கணேசனுக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது. மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் என இரு மகன்களும் சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர். கடந்த 2001ஆம் ஆண்டு அவர் காலமானார்.
இதையடுத்து அவரது குடும்பச் சொத்துகள் குறித்து பெரிதாக தகவல்கள் ஏதும் வெளியானதில்லை. இந்நிலையில் முதன்முறையாக தங்கள் தந்தையின் மரணத்துக்குப் பின்னர், 270 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முறையாக நிர்வகிக்கப்படவில்லை என சிவாஜியின் இரு மகள்களும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்துக்குச் சொந்தமான வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் சாடியுள்ளனர்.
இதுதொடர்பாக சிவாஜியின் மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்து வாரிசுரிமை சட்டத்தின் கீழ் தந்தையின் சொத்துகளில் தங்களுக்கும் உரிமை உள்ளது என்றும் சொத்துகளை பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும் என்றும் இருவரும் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தந்தையின் சொத்துகளை தங்களுக்குத் தெரியாமல் ராம்குமாரும் பிரபுவும் விற்றுள்ளனர் என்றும் அந்த விற்பனைப் பத்திரங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் சிவாஜி மகள்கள் கோரியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், ஆயிரம் சவரன் தங்க நகைகளையும் ஐந்நூறு கிலோ வெள்ளிப் பொருள்களையும் தங்கள் சகோதரர்கள் அபகரித்துவிட்டதாக இருவரும் குற்றம்சாட்டி உள்ளனர்.
"சென்னையில் உள்ள சாந்தி திரையரங்கு தொடர்பான 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிரபுவும் ராம்குமாரும் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டனர். நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாகக் கூறப்படும் உயில் பொய்யானது. பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று எங்களை ராம்குமாரும் பிரபுவும் ஏமாற்றிவிட்டனர்," என்றும் சிவாஜி கணேசனின் மகள்கள் இருவரும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

