சென்னை: இலவசப் பயணம் வழங்கும் நகரப் பேருந்துகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில், அப்பேருந்துகளுக்கு இளஞ்சிவப்பு நிற சாயம் பூசப்பட உள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் இயங்கும் அரசு நகரப் பேருந்துகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகள், பணிபுரியும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணச் சீட்டுகள் இன்றி இலவசமாகப் பயணம் செய்து வருகின்றனர்.
இதன்மூலம், பயன்பெற்றுள்ள பெண்களின் எண்ணிக்கை 62 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, இப்பேருந்துகளை அடையாளம் காண்பதில் ஒரு சிலர் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள 7,300 அரசு நகரப் பேருந்துகளும் முழுமையாக இயக்கப்பட்டு வரும் சூழலில், இலவச நகரப் ேபருந்துகளைப் பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், இளஞ்சிவப்பு நிறம் பூசப்பட உள்ளது.
இதன் முன்னோட்டமாக, சென்னை குரோம்பேட்டை மாநகரப் போக்குவரத்துக் கழகக் கூடத்தில் உள்ள பேருந்துகளுக்கு இளஞ்சிவப்பு நிறம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து, அரசுப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறுகையில், "பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் எளிதில் அடையாளம் காணும் வகையில், கட்டணமின்றி பயணம் செய்யும் பேருந்துகள் தனித்து தெரியும்படி இளஞ்சிவப்பு நிறம் பூச முடிவெடுத்துள்ளோம். பேருந்தின் முன்புறம், பின்புறப் பகுதியில் சாயம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசின் ஒப்புதல் கிடைத்தபின்னர், படிப்படியாக மற்ற பேருந்துகளிலும் இளஞ்சிவப்பு நிறம் பூசப்படும்," என்றனர்.