'ஊரடங்குக்கு அவசியமில்லை'
விருதுநகர்: தமிழகத்தில் கொவிட்-19 தாக்கம் குறைவாக இருப்பதால் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கவேண்டிய அவசியம் இல்லையென மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழகத்தில் இதுவரை 11 கோடியே 41 லட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் தமிழகத்தில் குறைவாக உள்ளதால் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கவோ, ஊரடங்கு விதிக்கவோ தேவையில்லை," எனத் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,448 பேருக்கு தொற்று உறுதியானது.
தாய் இறந்த அதிர்ச்சி; மகனும் பலி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், பொன் உசிலம்பட்டியைச் சேர்ந்த மருதம்மாள், 93, வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். தாய் இறந்ததைக் கண்டு பழனியப்பன், 56, கதறி அழுதார். துயரத்துடன் இறுதிச் சடங்குக்கான எற்பாடுகளைச் செய்தபோது, பழனியப்பனுக்கு இதய வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மருத்துவரின் பரிசோதனையில் மாரடைப்பில் அவர் இறந்துபோனது தெரியவந்தது. தாய்-மகன் அடுத்தடுத்து இறந்ததால் உறவினர்களும் குடும்பத்தினரும் சோகத்தில் மூழ்கினர்.
விபத்தில் நான்கு மீனவர்கள் பலி
ராமநாதபுரம்: கடல் அட்டையைப் பிடிக்க அனுமதி வழங்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அதன்பின்னர், வேனில் ராமேஸ்வரத்துக்குப் புறப்பட்டனர். மண்டபம் பகுதி அருகே அவர்களது வாகனம் சென்றபோது, எதிரில் வந்த சுற்றுலா வாகனத்துடன் மோதியது. இதில் நான்கு மீனவர்கள் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் மாலை நடந்த இந்தச் சம்பவத்தில் இரு வாகனங்களிலும் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆளில்லா விமானம் பறக்கத் தடை
சென்னை: மாமல்லபுரத்தில் 'செஸ் ஒலிம்பியாட்' போட்டிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களுடன் செஸ் விளையாடி மகிழ்ந்தார். இம்மாதம் 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெற உள்ளது. இதில் 188 நாடுகள் பங்கேற்க இருப்பது உறுதியாகி உள்ள நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக மாமல்லபுரத்தில் நேற்று முதல் ஆளில்லா விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிறுவனை முதலை விழுங்கி விட்டதாக மக்கள் குற்றச்சாட்டு
போபால்: மத்தியப்பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள சம்பல் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 10 வயது சிறுவனை ராட்சத முதலை விழுங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், கொந்தளித்துப் போன கிராமமக்கள், முதலையை ஆற்றுக்குள் சென்று பிடித்து இழுத்து வந்து கரையில் போட்டு போராட்டம் நடத்தினர். அதன் வயிற்றைக் கிழித்து சிறுவனை மீட்கும் வரை முதலையை விடமாட்டோம் என பிடிவாதம் பிடித்த மக்களிடம், காவல்துறையினர் சமரசமாகப் பேசி முதலையை மீட்டுச்சென்று பாதுகாப்பான இடத்தில் விடுவித்தனர். சிறுவனை முதலைதான் விழுங்கியதா? அவன் என்னவானான் எனத் தெரியவில்லை. படம்: ஊடகம்

