மசோதா இன்னும் ஆளுநர் மாளிகையில்தான் உள்ளதா என பாமக கேள்வி
சென்னை: மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) விலக்கு மசோதாவின் நிலை குறித்து எந்தவித தகவலும் அளிக்க இயலாது என தமிழக ஆளுநர் தெரிவித்திருப்பது பரபரப்பையும் புதிய விவாதங்களையும் எழுப்பி உள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அனுப்பப்பட்ட மனுவை ஏற்று விளக்கம் அளிக்க ஆளுநர் தரப்பு மறுத்துவிட்டது.
நீட் தேர்வுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே அந்தத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது.
அத்துடன் நிற்காமல், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் 'தமிழ்நாடு இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான சட்டம்' சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை நடைமுறைப்படுத்த அதிபரின் ஒப்புதல் தேவை. எனவே அதற்கான நடவடிக்கையாக, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வழிவகை செய்யும் மசோதா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பின்னர் இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சுக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்து இருப்பதாக சட்டப்பேரவையில் தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
எனினும், நீட் தேர்வு விலக்கு மசோதாவின் தற்போதைய நிலை குறித்து உரிய தகவல்களை அளிக்கக் கோரியுள்ளார் 'பொதுப் பள்ளிக்கான மாநில மேடை' என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு. இது தொடர்பாக அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார்.
இதற்கு ஆளுநர் மாளிகை பதில் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 11ஆம் தேதி ஆளுநர் மாளிகை அளித்த பதிலில், "நீட் விலக்கு மசோதா, சம்பந்தப்பட்ட அதிகாரியின் பரிசீலனையில் உள்ளது. அதனால் மனுதாரர் கோரிய தகவலைத் தெரிவிக்க இயலாது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்க ஆளுநர் மாளிகை மறுத்திருப்பது நியாயமல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
"நீட் விலக்கு சட்டம் உரிய அதிகார நிலையில் உள்ளவரால், தொடர் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. உரிய அதிகார நிலையில் உள்ளவர் ஆளுநரா, அதிபரா என்பதை தமிழக அதிபர் மாளிகை தெரிவிக்கவில்லை," என ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.
இக்குறிப்பிட்ட மசோதா மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் மாளிகை அளித்துள்ள பதில் காரணமாக, அந்தச் சட்ட மசோதா இன்னும் ஆளுநர் மாளிகையில்தான் உள்ளதோ எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
இதற்கிடையே, தமிழக மாணவர்களின் நலன் சார்ந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை கூடுதல் அக்கறையுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தி உள்ளார்.
தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவின் இன்றைய நிலைகுறித்து ஆளுநர் மாளிகை மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடும் மறைமுக மோதலும் நீடித்து வருகிறது.

