சென்னை: தமிழகத்தின் கோவை, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பருவமழை மெல்ல தீவிரமடைந்து வருகிறது.
அடுத்து வரும் தினங்களில் தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் நீலகிரி, கூடலூர் பகுதிகளில் 15 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது.
நீலகிரி மாவட்டத்தில், வழக்கமாக ஜூன் மாதத் தொடக்கத்திலேயே தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிடும் என்றும் இம்முறை அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்தது.
கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்த நிலையில், நேற்று பலத்த காற்றுடன் தொடர் சாரல் மழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீலகிரியில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
சில பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மங்குளி பகுதியில் தரைப்பாலம் ஒன்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. கூடலூர், பந்தலூர் பகுதிகளில் 10 ஆயிரம் பேர் தங்குவதற்கு ஏற்ப 450 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப் பகுதிகளில் வசிப்போர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஐந்து அடி அதிகரித்தது. அணை கட்டப்பட்ட பிறகு 68வது முறையாக அதன் நீர்மட்டம் நூறு அடியை எட்டியுள்ளது.

