சென்னை: அதிமுக பொருளாளர் பதவியில் தாம் இன்னும் நீடிப்பதாகவும் கட்சியின் வங்கிக் கணக்குகளை வேறு யாரும் கையாள அனுமதிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டு, ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் கணக்குகள் உள்ள வங்கிக் கிளையின் மேலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதிமுகவைக் கைப்பற்றுவதில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதையடுத்து அதிமுக தலைமையகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். அதிமுக வங்கிக் கணக்குகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இரு தரப்பினரும் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுகவின் வங்கிக் கணக்குகளை திண்டுக்கல் சீனிவாசனோ அல்லது அவரால் நியமிக்கப்படும் வேறு ஒருவரோ கையாள அனுமதிக்கக்கூடாது என்றும் கட்சிப் பொருளாளர் என்ற வகையில் தாம் மட்டுமே அவற்றைக் கையாள முடியும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வங்கி மேலாளருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணங்களின்படி அதிமுகவின் பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளில் தாம் இன்னும் நீடிப்பதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பும் வங்கி மேலாளருக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, வீண் சர்ச்சைகளைத் தவிர்க்கும்விதமாக அதிமுக வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே வருவாய்த்துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி இரு தரப்பினரும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
இது தொடர்பான மனுக்கள்மீது, தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகே விசாரணை நடைபெறும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் 17ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

